வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்த்தினப் போட்டிகள் இம்முறை வவுனியாவில் இடம்பெறவுள்ளன. எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் மாகாண மட்டத் தமிழ்த்தினப் போட்டிகள் இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகிறது. இதே வேளை தேசிய மட்டத்தமிழ்த்தினப் போட்டிகள் எதிர்வரும் யூலை 07 ஆம் 08 ஆம் திகதிகளிலும் 14 ஆம் 15 ஆம் திகதிகளிலும் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு பல்கலைக்கழக தமிழ்சங்கம் நடாத்திய மாவட்ட மட்ட நாடகப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் இருளினை நீக்கி எனும் நாடகம் மூன்றாம் இடத்தினைப்பெற்றுக்கொண்டது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் றொமைன் குக் மண்டபத்தில் இடம்பெற்ற மேற்படி போட்டியில் மத்தியகல்லூரி வெற்றிபெற்றது. இந்நாடகமானது நாடகமும் அரங்கியலும் ஆசிரியர் எஸ்.ரி.குமரனின் எழுத்துருவாக்கம் நெறியாள்கையில் ஆற்றுகை செய்யப்பட்டது. காட்சியமைப்பினை பிரவீனும் இசையினை ஏ.நிலக்ஷ்னும் மேற்கொண்டார்கள். நடிகர்களாக தயாநிசன், கவிராஜ், பிரவீன், பிரசாந், யெனிற்றன், அபிஷேக், தர்மிசன், சண்முகப்பிரியன், ஆகியோர் செயற்ப்பட்டார்கள். இப்போட்டியின் மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி நீண்ட இடைவெளிக்கு பின்பு மாவட்டப்போட்டியொன்றில் வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது.
தொகுதி ரீதியான தேர்தல் நடைபெற்ற போது 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவான யாழ் மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியல் பிரகாரம் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் இறுதியாக 1977ஆம் ஆண்டு நடந்த தொகுதி ரீதியான தேர்தலில் கிளிநொச்சி, சாவகச்சேரி,யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், உடுப்பிட்டி, பருத்தித்துறை, மானிப்பாய், வட்டுக்கோட்டை, காங்கேசன்துறை, ஊர்காவற்துறை ஆகிய 11 தொகுதிகளிலிருந்தும் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
1989ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட ரீதியான தேர்தலிலும் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வந்த போதிலும் யாழ்.மாவட்டத்தில் சனத்தொகை வீழ்ச்சி காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வந்தது.
இறுதியாக 2010 நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். எனினும் 2010ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வாக்காளர் பெயர்ப்பட்டியலின் பிரகாரம் எதிர்காலத்தில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களே தெரிவு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
2009ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 5 ஆகக் காணப்பட்ட வாக்காளர் தொகை 3 லட்சத்து 31 ஆயிரத்து 214 ஆல் குறைவடைந்து 2010ஆம் ஆண்டு 4 லட்சத்து 84 ஆயிரத்து 791 ஆகக் காணப்பட்டது. இந்தக் குறைவு காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 9 இல் இருந்து 6 ஆகக் குறைவடைந்தது.
இருப்பினும் 2011ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலில் மேற்படி தொகை ஒரு சில ஆயிரங்களால் குறைவடைந்துள்ளது. 2010ஆம் ஆண்டு வாக்காளர் எண்ணிக்கையை விட 2011ஆம் ஆண்டு வாக்காளர் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. இருப்பினும் பலர் இரட்டைப் பதிவுகள் மேற்கொண்டதன் காரணமாகவே இந்த அதிகரிப்பு ஏற்பட்டது. மீள் பரிசீலனையின்போது அவை நீக்கப்பட்டதன் காரணமாகவே குறைவு ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 5ஆக குறையலாம் என்றும் யாழ். தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்னிலங்கையில் உள்ள மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் அதேவேளை யாழ். மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் ஏனைய மாவட்டங்களைவிட யாழ்.மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகை குறைந்து செல்கிறது.
1977ல் வன்னி மாவட்டத்தில் 3பேர் தெரிவு செய்யப்பட்டனர். தற்போது 6பேர் தெரிவு செய்யப்படுகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 4பேர் தெரிவு செய்யப்பட்டனர். தற்போது 5பேர் தெரிவாகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் முன்னர் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகினர். தற்போது 7பேர் தெரிவு செய்யப்படுகின்றனர். ஆனால் யாழ்.மாவட்டத்தில் களுதை தேய்ந்து கட்டெறுப்பான கதையாக 11 நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து 5 நாடாளுமன்ற உறுப்பினராக குறைந்துள்ளது.
இதற்கு அரசாங்கமோ தேர்தல் திணைக்களமோ காரணமல்ல, யாழ். மாவட்ட மக்கள் தான் காரணம். வெளிநாட்டிற்கு இடம்பெயர்ந்ததும், உள்நாட்டில் இடம்பெயர்ந்து கொழும்பு நீர்கொழும்பு போன்ற இடங்களில் குடியேறி இருப்பதுமே காரணமாகும்.
நெடுந்தீவு மகேஷ் எழுதிய தாரணி ஒரு ஆச்சரியக்குறி என்ற சிறுகதை நூலின் வெளியீட்டு விழா 12.05.2012 மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் இடம்பெற்றது. ஆறுதல் நிறுவன இயக்குநர் சுந்தரம் டிவகலாலா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல.இளங்கோவன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
யாழ்.தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் பா.தனபாலன் வெளியீட்டுரையையும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசன் மற்றும் எழுத்தாளர் தாட்சாயணி ஆகியொர் ஆய்வுரைகளையும் வழங்கினர்.
க.பொத. உயர்தர மாணவர்கள் தேசிய பாடசாலையிலிருந்து மற்றொரு தேசிய பாடசாலைக்கு மாறுவதை சுற்றுநிருபமொன்றின் மூலம் கல்வி அமைச்சு இரத்துச் செய்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார்.
க.பொ.த. சாதாரண தர மாணவர்கள் வேறு பாடசாலைகளில் உயர்தரக்கல்வியை நாடுகின்றனர். இனிமேல் தேசிய பாடசாலை மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது என அவர் கூறினார்.
நீர்வேலி செல்லக் கதிர்காம முருகன் திருக்கோயிலில் கடந்த 2012 மார்ச் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனருத்தாரண மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடர்ச்சியாக கும்பாபிஷேகத்தை அடுத்த நாளிலிருந்து ஒரு மண்டலத்தை ஒட்டிய வழிபாடுகள் நடைபெற்றன.
இந்த மண்டல வழிபாட்டின் நிறைவை ஒட்டியதாக எதிர்வரும் 12.05.2012 சனிக்கிழமை (நாளை) சித்திரை மாத திருவோண நக்ஷத்திரத்தில் மாலை நாற்பத்து எட்டாம் திருநாளை ஒட்டிய சிறப்பு வழிபாடுகள் இவ்வாலயத்தில் நடைபெறவுள்ளன.
அன்று மாலை 3.00மணிக்கு கதிர்காமமுருகனுக்கும் பரிவாரமூர்த்திகளுக்கும் விசேட திரவிய அபிஷேகம், தீபாராதனை என்பனவற்றுடன் மண்டலபூரண சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.
மஹா கும்பாபிஷேக நிகழ்வுகளின் முழுமையை-பூரணத்துவத்தைக் குறிக்கும் வகையில் இவ்வழிபாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறச்செல்பவர்கள் நகைகளை அணிந்து செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகைகளுடன் வைத்தியர்களிடம் சென்றால் அவர்கள் பேசுவார்கள். எனவே அவற்றைக் கழற்றி எம்மிடம் தந்துவிட்டு உள்ளே போய் வாருங்கள் நாம் வைத்தியசாலை ஊழியர்கள். நீங்கள் வைத்தியரிடம் காட்டிவிட்டு வெளியே வந்ததும் உங்கள் நகைகளைத் தருகிறோம் என்று மிகப் பண்பாகப் பேசி ஒரு கூட்டம் நகைக் கொள்ளையில் ஈடுபட்டுவருவதாக வைத்தியசாலைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நோயாளிகள் வைத்தியசாலைக்குச் செல்லும்போது எந்தவித நகைகளையும் அணியாமல் வாருங்கள். மிக அவதானமாக இருங்கள். உங்கள் நகைகளுக்கு நீங்களே பொறுப்பு எனப் பொலிஸார் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது குறித்துப் பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது:
பெரும்பாலும் வெளிநோயாளர் பிரிவிலேயே இந்தக் கொள்ளை அதிகம் இடம்பெறுகிறது. மருத்துவ விடுதிகளிலும் இவை ஆங்காங்கே இடம்பெறுகின்றன. பல்வேறுபட்ட இடங்களிலிருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நோயாளர்கள் கிளினிக் மற்றும் மருத்துவ சேவைகளுக்காக வந்து செல்கின்றனர்.
அவர்களில் அநேகமாக வயதானவர்கள் எவரது உதவிகளுமின்றித் தனியாக வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்கு வருகின்றனர். அதனால் அவர்கள் தாம் கொண்டு செல்லும் பணம், அணிந்து செல்லும் நகைகள் ஆகியவற்றுடன் உள்ளே வைத்தியர்களிடம் செல்ல முடியாது.
அப்படிச் சென்றால் வைத்தியர்கள் பேசுவார்கள் இந்தச் சந்தர்ப்பத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது ஒரு கொள்ளைக் கூட்டம். வைத்தியசாலைக்கு வரும் வயதானவர்களிடம் "நீங்கள் உள்ளே வைத்தியரிடம் காட்டிவிட்டு வாருங்கள். நாங்கள் வைத்தியசாலை ஊழியர்கள் தான். உங்கள் நகைகளைக் கழற்றித் தாருங்கள். நீங்கள் வெளியே வந்ததும் அவற்றை உங்களிடம் ஒப்படைக்கிறோம்' என்று பண்பாகப் பேசுபவர்களிடம் நோயாளிகளும் தமது நகைகளைக் கழற்றிக் கொடுத்துவிட்டுச் செல்கின்றனர். திரும்பி வந்து பார்த்தால் அவர்களை அங்கு காணமுடியாது.
அதன் பின்னர் தான் புரியும் அவர்கள் கொள்ளைக் கும்பல் என்று. இவ்வாறு ஏராளமான முறைப்பாடுகள் எமக்கு வந்த வண்ணமுள்ளன. எனவே வைத்தியசாலைக்கு தங்க நகைகளை அணிந்து வர வேண்டாம். அத்துடன் வயதானவர்களும் யாரையாவது உதவிக்கு அழைத்து வாருங்கள்.
ஏனெனில் உதவி புரிகிறோம் என்று கூறியும் நகைகள், பணம் கொள்ளையிடும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. எனவே வைத்தியசாலைக்குச் செல்லும் ஒவ்வொருவரும் இது பற்றிக் கவனம் செலுத்துங்கள் என்று பொலிஸார் கூறினர்.
தொண்டமானாறு செல்வ சந்திதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம உற்சவத்திற்கான பாத யாத்திரை இம்முறையும் இடம்பெற உள்ளது.
இம்மாதம் 18ஆம் திகதி செல்வச்சந்திதி ஆலயத்திலிருந்து காரைதீவுவேல்சாமி தலைமையில் பாதயாத்திரை குழு புறப்பட இருக்கிறது. இரு மாதங்கள் இவர்கள் கால்நடை பயணத்தை மேற்கொண்டு யூலை 18ஆம் திகதி கதிர்காமத்தை சென்றடைய உள்ளனர்.
மே 18ஆம் திகதி செல்வச்சந்திதியிலிருந்து புறப்படும் இவர்கள் அச்சுவேலி, கொடிகாமம், பரந்தன், ஊடாக முல்லைத்தீவு வற்றாப்பளையை இம்மாதம் 30ஆம் திகதி சென்றடைவார்கள். வற்றாப்பளை கண்ணகை அம்மன் பொங்கலை முடித்துக்கொண்டு புறப்படும் இவர்கள் தண்ணீர்ஊற்று, குமுளமுனை, திரியான், குச்சவெளி, நிலாவெளி ஊடாக திருகோணமலையை சென்றடைவர்.
அங்கிருந்து மூதூர், கிளிவெட்டி, ஊடாக வெருகல் முருகன் கோவிலை சென்றடைவார்கள். அங்கிருந்து வாகரை ஊடாக யூன் 22ஆம் திகதி மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை சென்றடைவார்கள்.
அங்கிருந்து களுவாஞ்சிக்குடி, காரைதீவு பாணமை ஊடாக யூலை 8ஆம் திகதி உகந்தை முருகன் ஆலயத்தை சென்றடைவார்கள்.
அங்கிருந்து யால காட்டின் ஊடாக கானக பயணத்தை மேற்கொண்டு யூலை 18ஆம் திகதி கதிர்காமத்தை சென்றடைந்து கொடியேற்ற திருவிழாவில் கலந்து கொள்வார்கள். கதிர்காம கந்தன் தீர்த்தோற்சவம் ஓகஸ்ட் 2ஆம் திகதி நடைபெறும்.
நீர்வேலியில் திருடர் தொல்லை அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சத்துடன் இரவுப் பொழுதைக் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 08.05.2012 நீர்வேலி செல்லக்கதிர்காம சுவாமி கோவிலுக்கு அண்மையில் உள்ள பாடசாலை அதிபர் ஒருவரின் வீட்டின் ஓட்டைப் பிரித்துப் புகுந்த திருடர் வீட்டின் கதவுகளைத் திறந்து விட்டு அறையினுள் புக முயன்ற போது வீட்டுக்காரர் விழித்துக் கொண்டு கூக்குரலிட்டுள்ளனர். கொட்டன்கள் சகிதம் வந்த திருடர் அயலவர்களும் விழித்துக்கொண்டதைத் தொடர்ந்து அகப்பட்ட பொருள்களுடன் அவ்விடத்திலிருந்து ஓடிதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நீர்வேலி தெற்கு கிராமஅலுவலராக நீண்ட காலம் சேவையாற்றி தற்போது நீர்வேலி மேற்குப் பகுதிக்கு இடமாற்றம் பெற்றுள்ள நீர்வேலியை சேர்ந்த சமூகசேவையாளர் சி.சண்முகவடிவேல் அவர்களுக்கான சேவை நயப்புப் பாராட்டு விழா நீர்வேலிக் கிராமமக்களால் முன்னெடுக்கப்படவிருக்கிறது.
எதிர்வரும் ஜூன் முதல் வாரத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ள இந்நிகழ்வினைத் திறம்பட நடாத்துவதற்கு ஒரு பாராட்டு விழாச் சபையும் தெரிவாகியுள்ளது.
நல்ல பல பணிகளைச் செய்து உயர்ந்த சி.சண்முகவடிவேல் அவர்களின் பணிகள் இன்னும் இன்னும் தொடர.... வாழ வாழ்த்தி நடைபெறும் இந்நிகழ்வை நீர்வேலி இணையமும் மனமகிழ்ந்து வாழ்த்துகின்றது.
வாழைப்பழத்தின் விலை இந்த ஆண்டில் என்றுமில்லாதவாறு சரிவுகண்டுள்ளதாக நீர்வேலி விவசாயிகள் நீர்வேலி இணையத்திடம் கவலை வெளியிட்டுள்ளனர். குடந்த சில நாள்களாக வீசிய கடும் காற்றின் காரணமாக வாழை மரங்கள் முறிந்தமையாலும் விரைவில் பழுத்தமையாலும் வாழைப்பழ வருகை சந்தையில் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் இன்று கதலிப் பழம் கிலோ பதினைந்து ரூபாவாகவும் இதரைப்பழம் கிலோ 20 சூபாவாகவும் நீர்வேலி வாழைக்குலைச் சந்தையில் விற்கப்பட்டது.
நீர்வேலி ஐடியல் கல்வி நிலைய மாணவர்கள் கடந்த மூன்று நாள்களாக கல்விச் சுற்றுவாவில் ஈடுபட்டு இன்று 07.05.2012 மாலை நீர்வேலியை வந்தடைந்தனர். குடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்டு நுவரேலியா, கண்டி, திருகோணமலை ஆகிய இடங்களில் உள்ள முக்கிய இடங்களை இவர்கள் தரிசித்துவிட்டு வந்துள்ளனர். சுமார் 50 இற்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் இச்சுற்றுவாவில் பங்குகொண்டிருந்தனர்.
நீர்வேலிக் கந்தசுவாமி கோவில் திருப்பணி தொடர்பாக நிதி சேகரிப்பதற்கு பரிபாலன சபை தவிர, எந்த ஒரு தனி நபருக்கோ, அல்லது இணையத்தளத்திற்கோ, அமைப்பிற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை. குறிப்பாக, புலம்பெயர் நாடுகளில் இருந்து கந்தசுவாமி கோவிலுக்கு பணம் அனுப்புபவர்கள் நேரடியாக நீர்வேலிக் கந்தசுவாமி கோவில் என்ற பெயரில் மக்கள் வங்கி பிரதான வீதி யாழ்ப்பாணம் சேமிப்புக் கணக்கு இல 104–2–001–3–000618 என்ற சேமிப்புக் கணக்கு இலக்கத்திற்கு நேரடியாக வைப்புச் செய்யுமாறு பொருளாளர் ருக்மணி ஆனந்தவேலும் (தேவி அக்கா) தலைவர் க.நடராசாவும் இணைந்து அறிவித்துள்ளனர்.
நீர்வை கந்தப் பெருமானின் திருத்தேர்ப் பெருவிழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. விநாயகர், பார்வதி பரமேஸ்வரன் உடன்வர, ஆறுமாமுகத்து அருள் வள்ளல் வள்ளி, தேவசேனா தேவியருடன் திருத்தேருக்கு எழுந்தருளினார்.
காலை 7 மணிக்கு வசந்த மண்டபபூஜை நடைபெற்று அதனைத் தொடர்ந்து சுவாமி உள்வீதியில் திருநடனமிட்டு திருத்தேருக்கு எழுந்தருளினார்.
முதலில் விநாயகர், பின் சிவபெருமான் தேர்களும் தொடர்ந்து முருகனின் பெரிய தேரும் வலம் வந்தது.
ஏராளமான அடியார்கள் வடம் தொட்டிழுத்து… இறைவன் அருளில் இடம் பிடித்துக் கொண்டனர்.
சுவாமி தேரில் வலம் வந்த சமயம் ஆலய இளம் தொண்டர்களால், அன்பர்களுக்கு இலவசமாக, சர்க்கரைத்தண்ணீர், குளிர்களி (ஐஸ்கிறீம்) போன்றவை வழங்கப்பட்டன.
மண்டபப்படி தாரர்களும் தங்கள் பங்கிற்கு அன்பர்களை உபசரித்து மகிழ்ந்தனர். திருத்தேர் நிலையை பகல் 11.30 மணியளவில் அடைந்தது.. உடனேயே அன்னதான நிகழ்ச்சியும் ஆரம்பமாகியது.
பிற்பகலில் சுவாமி பச்சை சாற்றி ஆலயத்திற்கு எழுந்தருளினார்.
இன்று 03.05.2012 வியாழன் இரவு நீர்வைக் கந்தனின் சப்பரத் திருவிழா இடம்பெற்றது. வழமையைவிட அதிகளவு அடியவர்கள் வருகை தந்து எம்பெருமானின் அருளைப் பருகினர். சப்பரத்தை ஒட்டி நீர்வைக்கிழாரின் சிறப்புச் சொற்பொழிவு இடம்பெற்றது. தொடர்ந்து வசந்த மண்டப பூசை இடம்பெற்று அதனைத் தொடர்ந்து எம்பெருமான் சப்பரத்தில் ஆரோகணித்து அழகுத் திருக்கோலத்தைக் காட்டினார்.
பொலிகண்டியூர் கவிஞர் பொன். சுகந்தன் இலங்கையில் பிரசித்தி பெற்ற தலங்கள் மீது பாடிய இசை இறுவட்டின் அறிமுக நிகழ்வும் இடம்பெற்றது. இறுவட்டுப் பற்றிய அறிமுகவுரையை நீர்வைக்கிழார் வழங்க ஆலயக் குருக்கள் இராசேந்திர. சுவாமிநாதக் குருக்களும் நீர்வைமணியும் இணைந்து வெளியிட பரிபாலன சபைத் தலைவர் க. நடராசா பெற்றுக்கொண்டார். தொடர்ந்து ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் இறுவட்டைப் பெற்றுக்கொண்டனர்.
நாளை வெள்ளிக்கிழமை தோத்திருவிழா இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி காலை 7 மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்று 9 மணிக்கு தேர் இருப்பிடத்திலிருந்து நகரும். தேர்த்திருவிழாக் காட்சிகளுக்கு நீர்வேலி இணையத்துடன் இணைந்திருங்கள்.
கிளிநொச்சி மாவட்ட செயலக உதவி திட்ட பணிப்பாளர் அமரசிங்கம்கேதீஸ்வரன் எழுதிய திட்டமிடல் மூலதத்துவங்கள் எனும் நூல் வெளியீட்டு விழா 25.04.2012 இல் கிளிநொச்சி மத்திய கல்லூரியில நடைபெற்ற போது
01.மேலதிக அரசாங்க அதிபர் செ.சிறிநிவாசன் மங்கல விளக்கேற்றுவதையும்
02.அரசாங்க அதிபர் திருமதி,ரூபவதி கேதீஸ்வரன் வாழ்த்துரை வழங்குவதையும்
நீர்வேலி கந்தசுவாமி கோவில் காவடித் திருவிழா இன்று 01.05.2012 செவ்வாய்க்கிழமை காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இதன் சில படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.
நீர்வேலி வடக்கைச்; சேர்ந்த பொன்னம்பலம் கருணாகரன் என்ற 32 வயதுடைய குடும்பஸ்தர் பிரான்ஸ் பொபினி என்னும் இடத்தில் இடம்பெற்ற கார் விபத்தின் போது உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்து புறப்பட்ட இவரை வேகமாக வந்த கார் மோதியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர் ஒருபிள்ளையின் தந்தையாவார்.
இவரது மறைவு குறித்து நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்கருகில் பிரதான வீதியில் உள்ள இவர்களது தற்போதைய இல்லத்தில் துக்கம் அனுட்டிக்கப்படுகின்றது.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பிரான்சில் நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் நீர்வேலி இணையத்திற்குத் தெரிவித்தனர்.
நீர்வேலி தெற்கு கிராம அலுவலர் பிரிவுக்கான புதிய கிராம அலுவலராக இராச வீதி கோப்பாய் வடக்கு ஏன்னும் முகவரியைச் சொந்த இடமாகக் கொண்ட சின்னத்துரை தயாபரன் பதவியேற்கவுள்ளார். யாழப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவராக சி.தயாபரன் 1999 ஆம் ஆண்டில் கிராம அலுவலராகப் பணிப்பொறுப்பை ஏற்றுக் கொண்டவர். முதலில் கோப்பாய் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் பணியாற்றிய அவர் 2009 தொடக்கம் சிறுப்பிட்டி மேற்கு கிராம அலுவலர் பிரிவில் கடமையாற்றிளார்.
வலிகாமம் கிழக்குப் பிரிவில் கலைத்துவ எழுச்சி ஏற்படும் வகையில் பிரதேச செயலரின் வழிகாட்டலுக்கு அமைவாக முதன் முதலாகத் துணிந்து கிராம மட்டக் கலை விழாவை சிறுப்பிட்டியில் முன்னெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் இவர். புதிய கிராம அலுவலரின் அலுவலகம் கந்தசுவாமி கோவில் சூழலில் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய கிராம அலுவலருக்கு நீர்வேலி இணைத்தினதும் நீர்வேலி மக்களினதும் நல்வாழ்த்துக்கள். புதிய கிராம அலுவலர் தனது உத்தியோகக் கடமைகளை 02 ஆம் திகதி ஏற்பார் எனத் தெரிகிறது.
நீர்வேலி தெற்கு கிராம அலுவலராகப் பணியாற்றும் சு.சண்முகவடிவேல் கிராம அலுவலர்களுக்குத் தற்போது வழங்கப்பட்டுவரும் இடமாற்றத்திற்கு அமைவாக நீர்வேலி தெற்கு கிராம அலுவலர் பிரிவில் இருந்து நீர்வேலி மேற்கு கிராம அலுவலர் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அச்செழு கிராம அலுவலர் பிரிவுக்குரிய மேலதிக கடமைகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. இதே வேளை சிறுப்பிட்டி மேற்கு கிராம அலுவலராக இதுநாள் வரை கடமையாற்றிய சி.தயாபரன் நீர்வேலி தெற்கு கிராம அலுவலராக 02.05.2012 தொடக்கம் பதவியேற்கவுள்ளார்.
நீர்வேலி மேற்கு கிராம அலுவலராக பணியாற்றிய செல்வி குணசீலி புத்தூர் வடக்கு பிரிவுக்குரிய கிராம அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். நீர்வேலி வடக்கு கிராம அலுவலர் சு.அல்பிரட் அகவை அறுபதை நெருங்குவதால் இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படவில்லை எனத் தெரியவருகின்றது.
ஊரெழு கணேச வித்தியாலயத்தில் சமூகக்கல்வி ஆசிரியராகவும் பகுதித் தலைவராகவும் செயற்பட்ட மணிமேகலை செல்லையா அகவை அறுபது எய்தி கடந்த 20 ஆம் திகதி முதல் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 32 வருட கால ஆசிரிய சேவையில் கடந்த 16 வருடங்களாக ஊரெழு கணேச வித்தியாலயத்தின் உயர்ச்சிக்காக இவர் சேவையாற்றியதாகப் பாடசாலை அதிபர் எஸ்.திரிகரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி தமிழ்நாடு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தனால் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குரியவராகத் (Distinguished Life time Achievement Award in Management–2012) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆய்வுகளும் பிரசுரிப்புக்களும், நிர்வாக ரீதியான திறன்கள், உள்நாட்டு வெளிநாட்டு ரீதியான கல்வி ரீதியான பங்களிப்புக்கள் என்ற அடிப்படையில் சர்வதேச ரீதியிலான விண்ணப்பங்களுக்கு அமைய பாரதரிதாசனன் பல்கலைக்கழகத்தின் விஞ:ஞான முகாமைத்துவ ஆய்வு மையத்தினால் இவ்விருதுக்குரியவர் தெரிவுசெய்யப்படுகின்றார்.
இவ்வாண்டுக்குரிய விருதுக்குரியவராக இலங்கையில் இருந்து பேராசிரியர் தி.வேல்நம்பி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் திருநாவுக்கரசு–யோகமணி தம்பதியினரின் புதல்வர்.ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியில் ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்தரம் வரை கல்வி கற்று யாழ்; பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானவர். 1996 ஆண்டு டிசம்பர் மாதத்தில் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளராக நியமனம் பெற்று பேராசிரியர், துறைத்தலைவர் என பதவியுயர்வுகள் பெற்றுத் தற்போது பீடாதிபதியாக விளங்குகின்றார்.
பேராசிரியர் தி.வேல்நம்பி தமிழியலிலும் ஆழ்ந்த புலமையுள்ளவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
27.04.2012 சித்திரைத் திருவாதிரையன்று வெள்ளிக்கிழமை சுன்னாகம் கதிரவளை பொன்னம்பலவாண சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் 33 குண்ட பக்ஷ மஹா யாக மஹா கும்பாபிஷேகம் மிகவும் வித்தியாசமான முறையில் சிறப்பாக நடைபெற்றது.
நீர்வைக் கந்தப் பெருமானின் திருத்தல மஹோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று முன் பத்தாம் திருநாளன்று திருமஞ்சப் பவனி இடம்பெற்றது.
நூற்றுக்கணக்கான அடியவர்கள் திரண்டிருக்க விசேட மேள நாதஸ்வரக் கச்சேரியுடன் கொட்டும் மழையிலும் மிகச்சிறப்பாக திருமஞ்சப் பவனி இடம்பெற்றது.
நேற்று விசேட சங்காபிஷேகமும் உற்சவமும் நடந்தது. இன்றைக்கு 12ஆம் திருநாள் விழா நடைபெறுகின்றது. ஆலய விழா நாட்களில் மாலை வேளையில் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஆவரங்கால் சிவன் கோவில் என வழங்கப்படும் நடராஜ இராமலிங்க சுவாமி கோவிலின் மஹா கும்பாபிஷேகம் 25.04.2012 காலை 8.10 மணிக்கும் 9 மணிக்கும் இடையில் இடம்பெற்றது. ஆலயப் பிரதம குரு வே. நடராஜக் குருக்கள் சர்வபோதகாசாரியாராகத் தொழிற்பட கோப்பாய் ப.முத்துக்குமாரசாமிக் குருக்கள் கும்பாபிஷேகத்தைப் பிரதம குருவாக இருந்து நடத்தி வைத்தார். ஆலய சிவாச்சாரியார் ந.யோகேஸ்வரக் குருக்கள் நிகழ்வுகளை முன்னிலைப்படுத்தினார்.
கும்பாபிஷேகம் தொடர்பாக உதயன் பத்திரிகையில் இரண்டு பக்க சிறப்பு மலர் விளம்பரமாக வெளியிடப்பட்டிருந்தது.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆசீர்வாதம் மற்றும் பிரார்த்தனை உரை நிகழ்வுகளில் ஆலய தர்மகர்த்தா சபைத் தலைவர் வே. தில்லைநாதன், ப.முத்துக்குமாரசாமிக் குருக்கள், வே. நடராசக் குருக்கள், பேராசிரியர் ப.கோபாலகிருஷ்ண ஐயர், நல்லை ஆதீன முதல்வர் சோமசுந்தர பரமாசாரிய சுவாமிகள், கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசன், வலிகாமம் கிழக்கு பிரதேச செயலர் ம.பிரதீபன், லண்டன் ஆவரங்கால் நலன்புரிச் சங்கத்தைச் சேர்ந்த ஆவரங்கால் சின்னத்துரை, கனடாவில் இருந்து வருகை தந்த சு.முத்துராசலிங்கம் ஆலய திருப்பணிச் சபைச் செயலாளர் நீ.மயில்வாகனம் ஆகியோர் உரையாற்றினர்.
கும்பாபிஷேகத்தை ஒட்டி சிவசக்தி மணிமண்டபத்தில் அன்னதான நிகழ்வு இடம்பெற்றது. இதனை லண்டனில் இருந்து வருகை தந்த தொழிலதிபர் வே.சிவசுந்தரம் நெறிப்படுத்தினார்.
கும்பாபிஷேகத்தை ஒட்டி புலம் பெயர் நாடுகளில் வாழும் ஆவரங்கால் கிராமத்தவர் பலர் வருகை தந்திருந்தமையைக் காணமுடிந்தது.
சாவகச்சேரி பிரதேச சபையின் கைதடி பொது நூலகத்தினால் ஏப்பிரல் 23 சர்வதேச புத்தகத் தினத்தை முன்னிட்டு பொது அறிவு,சிறுவர் பொது அறிவு, பூத்திடும் பனந்தோப்பு நூல்களின் ஆசிரியரும் தேசிய பத்திரிகைகளின் பத்தி எழுத்தாளருமாகிய வேதநாயகம் தபேந்திரனும் அவரது துணைவியாரும் கௌரவிக்கப்பட்டனர்.பிரதேச சபையின் தலைவர் சி.துரைராசா ,உறுப்பினர் ச.தங்கராசா ஆகியோரும் அருகில் காணப்படுகின்றனர்.